தூத்துக்குடி அருகே மண்சரிந்து விழுந்து தொழிலாளி சாவு

தூத்துக்குடி அருகே மண்சரிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார். அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் கோரி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-28 13:40 GMT

தூத்துக்குடி அருகே மண் சரிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரி அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளி சாவு

தூத்துக்குடி மாநகராட்சி பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வெள்ளப்பட்டி பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு வளாகத்தில் அமைக்கப்படுகிறது. இந்த பணியில் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்தவர் முத்துவேல் மகன் வெள்ளப்பாண்டி (வயது 45) என்பவரும் ஈடுபட்டு இருந்தார். இவர் நேற்று காலையில் வழக்கம்போல் பணிக்கு சென்றாராம்.

அங்கு சுமார் 10 அடி ஆழத்துக்கு குழி தோண்டி உள்ளனர். மதியம் வெள்ளப்பாண்டி அந்த குழியின் உள்ளே நின்று தொடர்ந்து தோண்டி கொண்டு இருந்தாராம். எதிர்பாராத விதமாக அந்த குழியின் பக்கவாட்டில் இருந்த மண் சரிந்து குழிக்குள் விழுந்தது. இதில் உள்ளே நின்று கொண்டு இருந்த வெள்ளப்பாண்டி மண்ணுக்குள் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

மறியல்

இது குறித்து தகவல் அறிந்த வெள்ளப்பாண்டியின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு ராமேசுவரம் சாலையில் திடீரென அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன்பேரில் மக்கள் மறியலை கைவிட்டனர். தொடர்ந்து இறந்த வெள்ளப்பாண்டிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்