சத்தியமங்கலம் அருகே வேன் கவிழ்ந்து விபத்து; இளம்பெண் பலி

சத்தியமங்கலம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளம்பெண் பலி ஆனார். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-09-04 21:36 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளம்பெண் பலி ஆனார். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

கட்டிட தொழிலாளர்கள்

சத்தியமங்கலத்தை அடுத்து புதுக்கொத்துக்காடு பகுதியை சேர்ந்த 16 கட்டிட தொழிலாளர்கள் அருகே உள்ள ராஜன் நகரில் விருந்து நிகழ்ச்சிக்காக சரக்கு வேனில் சென்றனர். விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் அனைவரும் மீண்டும் சரக்கு வேனில் புதுக்கொத்துக்காடு பகுதிக்கு நேற்று சென்றனர்.

சரக்கு வேனை சத்தியமங்கலத்தை சேர்ந்த சல்மான் என்பவர் ஓட்டினார். சத்தியமங்கலத்தை அடுத்த தாண்டம்பாளையம் அருகே சென்றபோது சரக்கு வேன் நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மீதும் சரக்கு வேன் மோதியது.

சாவு

இந்த விபத்தில் புதுக்காடு பகுதியை சேர்ந்த கவிதா (வயது 26) என்ற பெண் சரக்கு வேனின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் டிரைவர் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்