பெருந்துறை அருகேகார் மோதி என்ஜினீயர் சாவு

பெருந்துறை அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் திருமணம் ஆன 3 மாதத்தில் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update:2023-03-23 02:31 IST

பெருந்துறை

பெருந்துறை அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் திருமணம் ஆன 3 மாதத்தில் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கார் மோதியது

திருப்பூர் அருகே உள்ள கணக்கம்பாளையம், சின்னத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் ரமேஷ் (வயது 33). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். ஈரோடு பெரிய சேமூரைச் சேர்ந்தவர் ஜெயராமன். அவருடைய மகள் யுவராணி. இவருக்கும், ரமேசுக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில் யுவராணி பெரியசேமூரில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி உள்ளார். இதனால் ரமேஷ் மனைவியை பார்ப்பதற்காக திருப்பூரில் இருந்து ஈரோட்டில் உள்ள மாமனார் வீட்டுக்கு நேற்று காலை தனது ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வந்த போது பின்புறமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக ரமேஷ் ஒட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது.

சாவு

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்த ரமேஷ் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான கேரள மாநிலம், பாலக்காட்டை் சேர்ந்த ஜெய் கிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆன 3 மாதத்தில் விபத்தில் என்ஜினீயர் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்