ஓட்டப்பிடாரம் அருகே 7 ஆடுகளை திருடிய 3 வாலிபர்கள் சிக்கினர்

ஓட்டப்பிடாரம் அருகே 7 ஆடுகளை திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-07-06 00:15 IST

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே 7 ஆடுகளை திருடி லோடு ஆட்டோவில் கடத்த முயன்ற 3 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

ஆடுகள் திருட்டு

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்தை சேர்ந்த மாடசாமி மகன் மகேஷ் (வயது 47). விவசாயி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஊருக்கு பக்கத்தில் உள்ள ஆட்டு கொட்டகையில் 30-க்கம் மேற்பட்ட ஆடுகளை கொட்டகையில் அடைத்து வைத்திருந்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவில் அந்த பகுதிக்கு 3 மர்ம நபர்கள் லோடு ஆட்டோவில் வந்துள்ளனர். அவர்கள் கொட்டகைக்குள் புகுந்து 7 ஆடுகளை திருடி லோடு ஆட்டோவில் ஏற்றி கடத்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது ஆடுகள் எழுப்பிய சத்தம்கேட்டு, அக்கம் பக்கத்தினர் மகேஷூவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் பதறிப்போன அவர் ஆட்டு கொட்டகைக்கு ஓடிவந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் லோடு ஆட்டோவில் ஆடுகளை வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டிருந்துள்ளனர்.

3 வாலிபர்கள் சிக்கினர்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகேஷ் போட்ட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். லோடு ஆட்டோவில் ஆடுகளை ஏற்றி கடத்தி முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் எப்போதும்வென்றான் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து எப்போதும்வென்றான் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த மர்ம நபர்களை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் வேல்ராஜ் (34), மருதநாயகம் மகன் மகேந்திரன் (25), ஆறுமுகம் மகன் அர்ஜூன் (25) என்பது தெரியவந்தது.

ேலாடு ஆட்டோ பறிமுதல்

இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3பேரையும் கைது செய்தனர். ஆடுகள் திருடுவதற்கு பயன்படுத்திய லோடு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்