கயத்தாறு அருகேகேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கயத்தாறு அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
கயத்தார் அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா, சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் மற்றும் போலீசார் கயத்தார் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கயத்தார் அருகே உள்ள திருமங்கலக்குறிச்சி ஊருக்கு அருகில் உள்ள கண்மாய் பகுதியில் ஒரு லாரி மற்றும் கார் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது, லாரி மற்றும் காரில் 400 மூட்டைகளில் மொத்தம் 15 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
15 டன்
அப்போது அங்கு இருந்த கோவில்பட்டி ஆலம்பட்டி கிருஷ்ணாநகரை சேர்ந்த அய்யாசாமி மகன் பாலமணிகண்டன் என்ற கோட்டூர் மணி (வயது 39) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நெல்லை நாரணம்மாள்புரத்தை சேர்ந்த முத்து என்ற பேச்சிமுத்து, திருமங்கலக்குறிச்சியை சேர்ந்த முருகன் ஆகியோர் மூலம் ரேஷன் அரிசியை வாங்கி கண்மாய் பகுதியில் பதுக்கி வைத்து, கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இது குறித்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமணிகண்டன் என்ற கோட்டூர் மணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு 2 பேரை தேடி வருகின்றனர்.