பவானிசாகர் அருகே வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலிமற்றொருவர் கதி என்ன?

பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலியானார். மற்றொருவர் கதி என்ன என்பது தெரியவில்லை.

Update: 2023-04-21 20:54 GMT

பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலியானார். மற்றொருவர் கதி என்ன என்பது தெரியவில்லை.

விசைத்தறி தொழிலாளர்கள்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வாகராயாம்பாளையம் பாப்பம்பட்டியை சேர்ந்தவர்கள் ராக்கிமுத்து (வயது 45). சிவக்குமார் (35), ராஜேந்திரன் (35).

இவர்கள் 3 பேரும் நண்பர்கள். அந்த பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

அடித்து செல்லப்பட்டனர்

இவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூருக்கு வந்து உள்ளனர். பின்னர் அவர்கள் அங்குள்ள கீழ்பவானி வாய்க்கால் படித்துறையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ராக்கிமுத்து, சிவக்குமார் ஆகியோர் குளிப்பதற்காக வாய்க்காலில் இறங்கி உள்ளனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் 2 பேரும் வாய்க்காலில் மூழ்கியதுடன், நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இதை கண்டதும் கரையில் இருந்த ராஜேந்திரன் சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். எனினும் அவர்கள் 2 பேரையும் மீட்க முடியவில்லை.

சாவு

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானிசாகர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சத்தியசிங் மற்றும் போலீசார், சத்தியமங்கலம் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் அவர்கள் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ராக்கிமுத்துவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீ்ட்டனர். மற்றொருவரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதனிடையே இருட்டிவிட்டதால் தீயணைப்பு வீரர்கள் இரவு 8 மணி அளவில் தங்களுடைய தேடுதல் பணியை நிறுத்தினர். இன்று (சனிக்கிழமை) காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

எரங்காட்டூர் கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்