பவானிசாகர் அருகே அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்பு
பவானிசாகர் அருகே பயிர்களை நாசம் செய்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டு உள்ளது.
பவானிசாகர்
பவானிசாகர் அருகே பயிர்களை நாசம் செய்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டு உள்ளது.
அட்டகாசம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட விளாம்பூண்டி வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறி பவானிசாகர் அருகே உள்ள அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள பயிர்களையும் நாசம் செய்தது.
எனவே பயிர்களை நாசப்படுத்தி அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து வேறு இடத்தில் கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கும்கி யானை வரவழைப்பு
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் ராஜ்குமார் உத்தரவின் பேரில், சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குனர் (பொறுப்பு) சுதாகர் மேற்பார்வையில், விளாம்பூண்டி வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையில் கும்கி யானை மூலம் காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக நேற்று கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் இருந்து கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் அதே பகுதியில் இருந்து முத்து என்ற கும்கி யானையும் வந்தவுடன் காட்டு யானையை பிடிக்கும் பணி தொடங்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.