ஆண்டிப்பட்டி அருகே ரேஷன் அரிசியில் எலிகள் கிடந்ததால் பரபரப்பு
ஆண்டிப்பட்டி அருகே ரேஷன் அரிசியில் எலிகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலசமுத்திரம் கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் பாலசமுத்திரம், கல்லுப்பட்டி, பந்துவார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்டவர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கடையில் அரிசி வினியோகம் செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் வாங்கி சென்றனர். பாலசமுத்திரத்தை சேர்ந்த மோகன் என்பவர் சாக்கு பையில் ரேஷன் அரிசி வாங்கினார்.
பின்னர் அந்த அரிசியை வீட்டிற்கு எடுத்து சென்று சாக்குப்பையை பிரித்து பார்த்தார். அப்போது பையில் இருந்த அரிசியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட எலிகள் ஓடின. இதனால் அதிர்்ச்சி அடைந்த அவர் அந்த அரிசியை எடுத்து கொண்டு ரேஷன் கடைக்கு வந்தார். பின்னர் கடை முன்பு அரிசியை தரையில் கொட்டி பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பொதுமக்களும் பணியாளரிடம் வாக்குவாதம் செய்தனர். ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசியில் எலிகள் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.