ஆண்டிப்பட்டி அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
ஆண்டிப்பட்டி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோத்தலூத்து கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குடிநீர் வினியோகத்திற்காக 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு 30 ஆண்டுகளை கடந்த நிலையில், தற்போது மிகவும் சேதமடைந்து அபாய நிலையில் காட்சியளிக்கிறது. குடியிருப்புக்கு நடுவே கட்டப்பட்டுள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த ஆண்டு அதிகமான விரிசல்கள் ஏற்பட்டதால் அதில் தண்ணீர் நிரப்பப்படவில்லை.
பயன்பாட்டில் இல்லாத அந்த மேல்நிலைத்தொட்டியின் கான்கிரீட் பெயர்ந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எந்த ஒரு கட்டிடத்திற்கும் 15 ஆண்டுகள் மட்டுமே ஆயுளாக அரசு நிர்ணயித்து வருகிறது. இதற்கிடையே கட்டப்பட்டு 30 ஆண்டுகளை கடந்தும், இந்த குடிநீர் மேல்நிலைத்தொட்டியை அகற்ற இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.