ஆவடி அருகே குடிசை வீடு எரிந்து சாம்பல் - கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

ஆவடி அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் குடிசை வீடு எரிந்து சாம்பலானது.;

Update:2023-03-05 13:30 IST

ஆவடியை அடுத்த பொத்தூர் வள்ளிவேலன் நகரில் வசிப்பவர் சாந்தகுமார். இவர், சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை எடுத்து செய்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா (வயது 34). இவர், செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். இவர்களது 2-வது மகன் சுஜன் ( 9) மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று மதியம் திடீரென இவர்களது குடிசை வீட்டில் இருந்த பிரிட்ஜ் வயரில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயந்துபோன சுஜன், உடனடியாக வெளியே ஓடிவந்துவிட்டார். அதற்குள் குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டுக்குள் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அம்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த பீரோ, பிரிட்ஜ், கட்டில் உள்ளிட்ட பொருட்கள் தீக்கிரையாகின.

இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்