ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி மீண்டும் போட்டி: ஐ.யு.எம்.எல். கட்சி அறிவிப்பு
ராமநாதபுரம் தொகுதியில் முறையும் ஏணி சின்னத்தில் போட்டியிட போவதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
திருச்சி,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.மு.க. கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ் கனி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் இன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்துக்குப் பின் காதர் மொய்தீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் தற்போதைய எம்.பி.யான நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடுவார்" என்று அறிவித்தார்.
எனினும், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் நவாஸ் கனி போட்டியிடலாம் என சொல்லப்பட்ட நிலையில், இந்த முறையும் ஏணி சின்னத்தில் போட்டியிட போவதாக காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.