கோவில்பட்டி கோவில்களில் நவராத்திரி விழா தொடக்கம்

கோவில்பட்டி கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.

Update: 2023-10-16 18:45 GMT

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கி, நடந்து வருகிறது. கோவில்களில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

செணபகவல்லி அம்மன் கோவில்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நவராத்திரி விழா மற்றும் லட்சார்ச்சனை விழா நேற்று முன்தினம் தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து வருகிற 25-ந் தேதி வரை தினமும் அம்பாளுக்கு காலை 8 மணி முதல் 11.30 மணி வரை லட்சார்ச்சனை மற்றும் தீபாராதனை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை லட்சார்ச்சனையும், தீபாராதனையும் நடைபெறும்.

அம்பாளுக்கு அலங்காரம்

மேலும், வருகிற 24-ந்தேதி வரை உற்சவர் அம்பாளுக்கு காலை 10 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு உற்சவர் கொலு அம்பாளுக்கு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும். அக்.24-ந்தேதி இரவு 7.30 மணிக்கு மேல் புஷ்பாஞ்சலி நடைபெறும்.

ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு உறுப்பினர்கள் சண்முகராஜ், ரவீந்திரன், திருப்பதி ராஜா, நிறுத்தியலட்சுமி என்ற சுதா, செயல் அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

கோவில்களில் கொலு

அதுபோல, கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில், வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோவில், மாலையம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது. இக்கோவில்களில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்