ஆனைமலை, நெகமம் பகுதிகளில் அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா தொடக்கம்

ஆனைமலை, நெகமம் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.

Update: 2022-09-27 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை, நெகமம் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது.

வழிபாடு

நவராத்திரி விழாவையொட்டி ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் கொலு பொம்மை வழிபாடு தொடங்கியது. அம்மன் சிம்ம வாகனத்தில் உற்சவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 2 அடுக்குகளில் உள்ள 7 படிக்கட்டுகளில் தசாவதாரம், அஷ்டலட்சுமி, சூரிய பகவான், பள்ளிகொண்ட பெருமாள், விநாயகர், மீனாட்சி சுந்தரேஷ்வரர், சாமுண்டி, வராகி, கள்ளழகர் உற்சவ காட்சி உள்பட ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு வகையான தெய்வங்கள், தேசத் தலைவர்கள் வர்ணப் பொம்மைகள் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதை கண் குளிர பார்த்து மனம் உருகி அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

நவராத்திரி விழா

நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில்களில் சரஸ்வதி பூஜை, நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மை வைத்து வழிபாடு தொடங்கியது. இந்துக்கள் பண்டிகையான சரஸ்வதி பூஜை அக்டோபர் 4-ந்தேதியும், விஜயதசமி 5-ந்தேதியும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நவராத்திரி உற்சவம் நேற்று தொடங்கியது. நவராத்திரி உற்சவத்தையொட்டி நெகமம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி விழா களை கட்டியது. நெகமம் காமாட்சி அம்மன் கோவில், சவுடேஸ்வரியம்மன் கோவில், வீரமாத்தியம்மன் ஆகிய கோவில்களில் நவராத்திரி கொழுபொம்மை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதேபோல் பல வீடுகளில் நவராத்திரி கொழு பொம்மை அமைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். இதில் மாலை நேரத்தில் பல்வேறு பஜனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. பூஜையில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்