தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு
நெமிலி தாலுகாவில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு செய்தனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு
நெமிலி தாலுகாவில் உள்ள சயனபுரம் கிராமத்தில் நேற்று தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். நெமிலி கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் சயனபுரம், கீழ்வெங்கடாபுரம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளது.
இதில் சயனபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் பருவமழையின் போது தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்து மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்தநிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று சயனபுரம் பள்ளிக்கூட வளாகம், பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டனர்.
மருத்துவ வசதி
பின்பு வெள்ளத்தால் பாதிக்கப்படுவோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க சயனபுரம் கிராம சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவ வசதி உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து நெமிலி கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது நீர் செல்லும் திசைகள் மற்றும் எந்தெந்த பகுதிகளில் மிகுந்த சேதம் ஏற்படுகிறது என்பதை வருவாய் துறையினரிடம் கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின்போது நெமிலி தாசில்தார் பாலசந்தர், மண்டல துணை தாசில்தார் சத்யா, வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராமநிர்வாக அலுவலர் ரகு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.