நாதஸ்வர கலைஞரை தாக்கி 2 தங்க மோதிரம்-பணம் திருட்டு
திருவரங்குளம் அருகே நாதஸ்வர கலைஞரை தாக்கி 2 தங்க மோதிரம்-பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 தங்க மோதிரம் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் சண்முகம் பிள்ளை (வயது 82). நாதஸ்வர கலைஞர். இவர் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன், மருமகள், பேரன் ஆகியோர் அருகில் உள்ள அம்மன் சன்னதியில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். சண்முகம் பிள்ளை எப்பொழுதும் கையில் மூன்று மோதிரங்கள் அணிந்திருப்பார். இதையடுத்து அவர் வீட்டில் இரவு தூங்கி கொண்டிருந்தார்.
இதையடுத்து வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் முதியவர் வீட்டில் இருந்த ரூ.15 ஆயிரத்தை திருடி கொண்டு, முதியவர் கை விரலில் இருந்த மோதிரங்களை கழட்ட முயன்றார். அப்போது கண்விழித்த முதியவர் மர்மநபரிடம் இருந்து மோதிரத்தை பறிக்க விடாமல் தடுத்தார். இதையடுத்து மர்மநபர் முதியவரை அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து தாக்கியதில் படுகாயமடைந்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து மர்மநபர்் பணம் மற்றும் 2 மோதிரத்தை முதியவரிடம் இருந்து திருடி கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ஒரு மோதிரம் மட்டும் முதியவர் கையில் இருந்து கழட்ட முடியில்லை.
போலீசர் விசாரணை
இதையடுத்து முதியவரின் முனகல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் ரத்தவெள்ளத்தில் கிடந்ததை பார்த்தனர். இதையடுத்து அவர்கள் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புகாரின் பேரில், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.