நாமக்கல்: வகுப்பறையில் மாணவர்கள் மோதி கொண்டதற்கு வகுப்பு ஆசிரியரே காரணம் - பெற்றோர் புகார்

பள்ளியில் உயிரிழந்ததால் பள்ளி நிர்வாகம் தான் புகார் அளிக்க வேண்டும் என்று மாணவரின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-08-24 07:51 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள நவலடிப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ஆகாஷ் (வயது 16). இவர் வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 கணினி அறிவியல் படித்து வந்தார். நேற்று மாணவர் ஆகாஷ் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார்.

அங்கு அவருக்கும் சக மாணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஆகாஷை, மற்றொரு மாணவர் கடுமையாக தாக்கி உள்ளார். அப்போது ஆகாஷ் நிலை தடுமாறி மயங்கி விழுந்துள்ளார். அதைக்கண்ட சக மாணவர்கள் கூச்சலிட்டதால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் படுகாயம் அடைந்த மாணவர் ஆகாசை மீட்டு கார் மூலம் எருமப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மாணவரை மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தராஜ் மற்றும் எருமப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், செருப்பு காணாமல் போனது குறித்து மாணவன் ஆகாஷ் கேட்டதை தொடர்ந்து ஏற்பட்ட தகராறில் சக மாணவர் தாக்கியதால் மயங்கி விழுந்து ஆகாஷ் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை தாக்கிய பிளஸ்-1 மாணவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து எருமப்பட்டி அருகே பிளஸ்-1 மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயிரிழந்த மாணவர் உடன் படித்த மாணவர்கள் மற்றும் அந்த பள்ளியின் ஆசிரியர்களிடம் தனித்தனியாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் விசாரணை இன்று நடத்தினார்.

இந்நிலையில் நாமக்கல்லில் சக மாணவர் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவரின் பிரேத பரிசோதனை தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெற்றோர் புகார் மனு அளிக்காததால் பிரேத பரிசோதனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவரின் பெற்றோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர் மற்றும் சம்மந்தப்பட்ட மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை புகார் அளிக்க மாட்டோம் என்று மாணவரின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வகுப்பறையில் மாணவர்கள் மோதி கொண்டதற்கு வகுப்பு ஆசிரியர் தான் காரணம் என்று பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பள்ளியில் உயிரிழந்ததால் பள்ளி நிர்வாகம் தான் புகார் அளிக்க வேண்டும் என்றும் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

புகார் இல்லாமல் போலீசார் வழக்குப்பதிவு செய்ய முடியாததால் மாணவர் ஆகாஷ் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியாத சூழல் தற்போது நிலவுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்