'டெஸ்ட் பர்ச்சேஸ்' முறையை கைவிடக்கோரிவணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் 24-ந் தேதி ஆர்ப்பாட்டம்நாமக்கல்லில் விக்கிரமராஜா பேட்டி
'டெஸ்ட் பர்ச்சேஸ்' முறையை கைவிடக்கோரி தமிழகம் முழுவதும் வருகிற 24-ந் தேதி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக நாமக்கல்லில் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று நாமக்கல் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்பால் தமிழகத்தில் சுமார் 13 சதவீத கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் பல அந்நிய கம்பெனிகள் ஆன்லைன் மூலமாகவும், பிரமாண்டமான சூப்பர் மார்க்கெட்டுகள் மூலமாகவும், பொருட்களை விற்பனை செய்வதால், உள்ளூர் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, வணிகவரித்துறையின் 'டெஸ்ட் பர்ச்சேஸ்' போன்றவற்றால் சிறிய வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 'டெஸ்ட் பர்ச்சேஸ்' முறையை கைவிடக்கோரி வருகிற 24-ந் தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
வணிகர் சங்க மாநாடு
வருகிற மே மாதம் 5-ந் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் வணிகர் சங்க மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அந்நிய நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடுவதை தடை செய்யக்கோருவது முக்கிய தீர்மானமாக நிறைவேற்றப்படும்.
அந்நிய நிறுவனங்களிடம் இருந்து உள்ளூர் வியாபாரிகளை காப்பாற்றும் வகையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ளூர் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகளை ஒருங்கிணைத்து பொருட்களை மொத்த கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கான முதற்படியாக நாமக்கல்லில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடைகளை ஒருங்கிணைத்து மொத்த வியாபார கடையை தொடங்கி உள்ளனர். இது மற்ற வணிகர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும்.
சிம்கார்டு விற்பனைக்கு தடை
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அங்கீகாரம் இல்லாத பலர் சாலை ஓரங்களில் கடைகளை அமைத்து செல்போன் மற்றும் சிம்கார்டு விற்பனை செய்து வருகின்றனர். இது போன்ற இடங்களில் சமூக விரோதிகள், முறையான அடையாள அட்டை இல்லாமல் சிம்கார்டுகளை வாங்கி அதை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே அங்கீகாரம் இல்லாமல் சாலை ஓரங்களில் செல்போன், சிம் கார்டுகள் விற்பனையை போலீசார் தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணை தலைவர் பெரியசாமி, நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.