நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழைக்கு 22 ஏரிகள் நிரம்பின விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழைக்கு 22 ஏரிகள் நிரம்பின விவசாயிகள் மகிழ்ச்சி;

Update:2022-10-13 00:15 IST

நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக இதுவரை 22 ஏரிகள் நிரம்பி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சராசரி மழையளவு

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இயல்பை காட்டிலும் அதிகளவு மழை பெய்தது. இந்த ஆண்டும் கடந்த 2 மாத காலமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன், வறண்டு காணப்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள் நிரம்பி வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 766 மி.மீட்டர் ஆகும் ஆனால் கடந்த ஆகஸ்டு மாதத்தில், 2,088.80 மி.மீட்டரும், செப்டம்பர் மாதத்தில் 932.42 மி.மீட்டரும் என மொத்தம் 3,021.22 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த மாதத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கி இதுவரை 1,088 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது.

22 ஏரிகள் நிரம்பின

நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில், 79 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக, இதுவரை 22 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளன.

நாமக்கல் கோட்டத்தில் செருக்கலை, இடும்பன் குளம், சேந்தமங்கலம் கோட்டத்தில் பொம்மசமுத்திரம், பெரியகுளம், துத்திக்குளம், பொன்னர்குளம், செட்டிக்குளம், எருமப்பட்டி கோட்டத்தில், தூசூர், பாப்பன்குளம், பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, புதுக்குளம் ஏரிகளும், அதேபோல் சேமூர், அக்கரைப்பட்டி, கோட்டப்பாளையம், ஏமப்பள்ளி, தேவனாம்பாளையம், பருத்திப்பள்ளி, பாலமேடு, மாணிக்கம்பாளையம், இலுப்புலி, அகரம் என மாவட்டத்தில் மொத்தம் 22 ஏரிகள் நிரம்பி உள்ளன.

இதேபோல் நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி மற்றும் மின்னக்கல் ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேலும், 9 ஏரிகள் 50 சதவீதம் வரையிலும், 5 ஏரிகள் 25 சதவீதம் வரையிலும் நிரம்பி உள்ளன. ஒட்டுமொத்தமாக 41 ஏரிகள் இன்னும் சிறிதளவு கூட தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதனால் அவற்றின் சுற்றுவட்டார விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

நாமக்கல் அருகே உள்ள தூசூர் ஏரி இந்த ஆண்டு 2-வது முறையாக நிரம்பி இருப்பதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் கொண்டிசெட்டிப்பட்டி ஏரியும் நிரம்பி காணப்படுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.

தொடர்மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால், ஆங்காங்கே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்