நாமக்கல்லில் கனமழை: தரைமட்ட பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

நாமக்கல்லில் கனமழை: தரைமட்ட பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-10-10 18:45 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் வழக்கத்திற்கு மாறாக காலை முதல் மாலை வரை வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்தது. இரவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டியது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு:-

பரமத்திவேலூர்-115, கொல்லிமலை-94, புதுச்சத்திரம்-85, சேந்தமங்கலம்-84, ராசிபுரம்-74, கலெக்டர் அலுவலகம்-71, மோகனூர்-60, நாமக்கல் -50, எருமப்பட்டி-35, திருச்செங்கோடு-33, குமாரபாளையம்-29, மங்களபுரம்-28. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் நகரை பொறுத்தவரையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டியது. இந்த மழைக்கு ஆங்காங்கே பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை ரெயில்வே மேம்பாலத்திற்கு அடியில் உள்ள தரைமட்ட பாலத்தில் சுமார் 2 அடிக்கு தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக அந்த பாதையை பயன்படுத்தி வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. ஒருசிலர் தட்டுத்தடுமாறி தண்ணீரில் நடந்து சென்றதை பார்க்க முடிந்தது.

நாமக்கல் நகரில் கனமழை பெய்தால் தரைமட்ட பாலத்தில் எளிதில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இங்கு தண்ணீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்