நாகை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் நாகை மீனவர்கள் விசைப்படகுகளுக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

Update: 2022-06-14 18:19 GMT

நாகப்பட்டினம்:

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் நாகை மீனவர்கள் விசைப்படகுகளுக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.

மீன்பிடி தடைக்காலம்

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் நேற்று வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டது.

வலைகள் சீரமைப்பு

மீன்பிடி தடைக்காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகுகள், இழுவை படகுகள் ஆகியவை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். ஆனால், அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட எல்லை வரை சிறியவகை படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்படும்.

மீன்பிடி தடைக்காலத்தையொட்டி நாகை மாவட்டத்தில் 1,000 விசைப்படகுகள் கரைப்பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு, பழுது பார்த்தல், வர்ணம் தீட்டுதல், என்ஜின் பழுது பார்த்தல், வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்

இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததையொட்டி நேற்று மாலை முதலே நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்ப குறைந்தது 5 நாட்கள் ஆகும். இதனால் ஒருவாரம் கடலில் தங்கி மீன்பிடிக்க தேவையான உணவு பொருட்கள் மற்றும் மீன்களை பதப்படுத்த ஐஸ் கட்டிகள், டீசல், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் படகுகளில் ஏற்றி தயார் நிலையில் இருந்தனர்.

கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்

தடைக்காலம் முடிந்து முதன்முதலாக கடலுக்கு செல்வதால் மீனவர்கள் படகுகளுக்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு புறப்பட்டு ெசன்றனர்.

2 மாதங்களுக்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்க ஒன்றன் பின் ஒன்றாக சென்ற விசைப்படகுகளின் அழகை அக்கரைப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்