நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர். எம்.செல்வராஜ் எம்.பி. (67 வயது) இன்று (13.05.2024) அதிகாலை 02.40 மணிக்கு சென்னை மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் எம்.செல்வராஜ் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கப்பலுடையான் என்ற ஊரில் வாழ்ந்து வந்த ஏழை விவசாயி முனியன் - குஞ்சம்மாள் தம்பதியரின் மகனாக 1957 மார்ச் 16-ம் தேதி பிறந்தவர்.
நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான மக்கள் தளமாகும். விவசாயிகள் இயக்கத்தில் முனியன் - குஞ்சம்மாள் குடும்பமும் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில் தோழர் எம்.செல்வராஜ் சிறுவயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து செயல்படத் தொடங்கினார். பள்ளிக் கல்வியை முடித்து திருவாரூர் திரு. வி.க. அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.
மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்ட தோழர் எம். செல்வராஜ் அதன் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் இடைக்குழு உறுப்பினர், துணைச் செயலாளர், செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்து ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலக் குழு உறுப்பினர், தேசியக் குழு உறுப்பினர் என பல்வேறு உயர் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர்.
ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் திருவாரூர், நாகபட்டினம் என பிரித்து அமைக்கப்பட்ட போது திருவாரூர் மாவட்டத் துணைச் செயலாளர், நாகபட்டினம் மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நீண்ட காலம் செயல்பட்டவர். வர்க்க எதிரிகளால் படுகொலை செய்யப்பட்ட சித்தமல்லி எஸ். ஜி. முருகையன், மூத்த மகள் கமலவதனத்தை வாழ்விணையராக ஏற்று, அந்த குடும்பத்தின் மூத்த மருமகனாக, அந்தக் குடும்ப பொறுப்புகளை ஏற்று சிறப்பு சேர்த்தவர். கமலவதனம் திருவாரூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவராக ஐந்தாண்டுகள் பணியாற்ற ஊக்கம் தந்தவர்.
1989-ம் ஆண்டு நாகபட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக மக்களவைக்கு சென்றவர். தொடர்ந்து 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நாகபட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
நாடாளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடியவர். 1989 ஜூன் 12 காவிரி நதிநீர் பிரச்சினை மீது நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை முதல் வேதாரண்யம் ராஜாஜி பூங்கா வரை 110 கிலோ மீட்டர் தூரம் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தியதில் முன்னணி பங்கு வகித்தவர்.
ஓஎன்ஜிசி தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்களை அணி திரட்டி தொழிற்சங்கம் அமைத்து தந்தவர், தமிழ்நாடு ஏஐடியூசி துணைத் தலைவர் பொறுப்பில் செயல்பட்டு வருபவர். தோழர் எம்.செல்வராஜுக்கு ருத்திராபதி, என்ற மூத்த சகோதரர், நாகம்மாள், சாரதா மணி என இரண்டு மூத்த சகோதரிகள், வீரமணி, வெற்றிச் செல்வி என இளைய சகோதரரும், சகோதரியும் உள்ளனர். இதில் மூத்த சகோதரி நாகம்மாள் சில வருடங்களுக்கு முன்னர் காலமாகிவிட்டார்.
தோழர் எம். செல்வராஜ் சிறுநீரகப் பாதிப்பு காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொள்ளும் சிகிச்சை பெற்றவர். இவரது சகோதரி சாரதாமணி சிறுநீரகம் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் கட்சி பொறுப்புகளையும், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தொகுதிப் பிரச்சினைகளிலும் சலிப்பறியாது, சோர்வு அடைந்து, ஓய்ந்து விடாமல் முனைப்போடு செயல்பட்டு முன்னுதாரணமாக திகழ்ந்த வந்த தலைமைத்துவம் கொண்ட மக்கள் ஊழியரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இழந்து நிற்கிறது.
செல்வராஜ் - கமலவதனம் தம்பதியருக்கு செல்வப்பிரியா, தர்ஷினி என இரு மகள்கள் உள்ளனர். இதில் செல்வப் பிரியாவுக்கு கடந்த ஆண்டு (2023) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய தோழர் எம். செல்வராஜ் உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாலை 02.40 மணிக்கு காலமானார்.
நாளை (14.05.2024) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் அன்னாரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும். அன்னாரது மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செங்கொடி தாழ்த்தி, செவ்வணக்கம் கூறி, அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது வாழ்விணையர் கமலவதனம், மகள்கள் செல்வப்பிரியா, தர்ஷினி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.
மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கட்சி அமைப்புகள், செங்கொடியினை அரைக் கம்பத்திற்கு இறக்கி விட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.