நாம் இந்தியர் கட்சியின் நூல் வெளியீட்டு விழா

தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சியின் நூல் வெளியீட்டு விழா நடந்தது.

Update: 2023-04-15 19:00 GMT

நாம் இந்தியர் கட்சி சார்பில் தமிழ் புத்தாண்டு விழா மற்றும் நான் அறிந்த மனிதமும், அரசியலும் என்ற நூல் வெளியீட்டு விழா தூத்துக்குடியில் நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் என்.பி.ராஜா கலந்து கொண்டு, நூலை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இந்த புத்தகத்தை எழுதியுள்ளேன். தகவல் தொழில்நுட்ப புரட்சியில் நாம் எவ்வாறு முன்னேறியுள்ளோம் என்பது குறித்தும் இதில் எழுதியுள்ளேன்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருந்தபோது பா.ஜனதா கட்சி நன்றாக இருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை இல்லை. மக்களை பல்வேறு வரியினங்கள் வாட்டுகின்றன. இந்தி மொழியை இளைஞர்கள் நிச்சயம் படிக்க வேண்டும். ஏனென்றால், இந்தி படிப்பதால் நமது கருத்துகளை இந்தியா முழுமைக்கும் எளிதாகக் கொண்டு சேர்க்கலாம்.

சூரிய மின்சக்தி, காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைக்கிறது. எனவே, அரசு மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். விவசாய பொருள்களின் சந்தை விலையை தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் அறியும் வகையில் அனைத்து சந்தைகளிலும் தெளிவாக டிஜிட்டல் போர்டு மூலம் தெரியப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வருகிற 2031-ம் ஆண்டு நிச்சயம் நாம் இந்தியர் கட்சி ஆட்சிக்கு வரும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். முன்னதாக கட்சியின் மாநிலச் செயலர் பி.பொன்ராஜ் வரவேற்று பேசினார். முடிவில் கட்சியின் மாநில பொருளாளர் ஜெயகணேஷ் நன்றி கூறினார்.

இதில், கின்ஸ் அகாடமி நிறுவனர் பேச்சிமுத்து, தூத்துக்குடி வழக்குரைஞர் சங்கத் தலைவர், செங்குட்டுவன், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, அவைத்தலைவர் அமிர்த்காந்தன், நெல்லை மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்