மலைப்பாம்பை கொன்ற மர்மநபர்கள்
கடையம் அருகே கல்லை தூக்கிப்போட்டு மலைப்பாம்பை மர்மநபர்கள் கொன்று உள்ளனர். அவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகம் வெளிமண்டல பகுதியான செட்டிகுளத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் நேற்று சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சாலையை கடந்தது. அப்போது மர்மநபர்கள் சிலர், பெரிய கல்லை தூக்கி அதன் மீது மீண்டும், மீண்டும் போட்டு உள்ளனர். இதில் அந்த மலைப்பாம்பு பரிதாபமாக செத்தது.
இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனச்சரகர் கருணாமூர்த்தி உத்தரவின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று இறந்த மலைப்பாம்பை எடுத்து அந்த பகுதியில் புதைத்தனர். மேலும் அதை கொன்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்தாலோ அல்லது கண்ணில் தென்பட்டாலோ அவற்றை அடித்து கொல்லவோ, தொந்தரவு செய்யவோ கூடாது. உடனடியாக தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.