பள்ளி மாணவிகளின் மர்ம மரணங்கள்: விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

பள்ளி மாணவிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-07-26 07:27 GMT

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாணவி ஸ்ரீமதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மண்ணின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில் திருவள்ளூரில் மற்றொரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது.

மாணவி ஸ்ரீமதி மரணத்தைத் தொடர்ந்து சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், திருப்பூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும், செங்கல்பட்டில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை முடிவு எதற்கும் தீர்வாகாது என்பதை மாணவ, மாணவிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் மாணவர்கள் அதனை மனதில் வைத்து பூட்டி கொள்ளாமல் பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ மனம் விட்டு சொல்லுங்கள். அப்போதுதான் அதற்கு உரிய தீர்வு காண முடியும்.

தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் உங்களை விட்டு நீங்கும். நாட்டின் எதிர்கால தூண்களான மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தி வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். மனதை உறுதியோடு வைத்துக்கொண்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டும்.

மேலும் பள்ளி மாணவிகளின் மர்ம மரண வழக்குகள் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டாலும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்