ஆதரவற்ற மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்
அதிராம்பட்டினத்தில் மூதாட்டியின் ஆதரவற்ற உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.;
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினத்தில் மூதாட்டியின் ஆதரவற்ற உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ஆதரவற்ற மூதாட்டி சாவு
அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியான சுரைக்காய்க்கொல்லை பகுதியில் வசித்து வந்தவர் செல்லம்மாள் (வயது 92). இவர் எந்த ஆதரவும் இல்லாமல் வாழ்ந்து வந்தார். செல்லம்மாவின் பேத்தி கார்த்திகா.
இவர் வறுமையில் இருந்து வந்த நிலையில் தனது பாட்டி செல்லம்மாவுக்கு உணவு கொடுத்து கவனித்து வந்தார். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட செல்லம்மாள் மரணமடைந்தார்.
இந்துமுறைப்படி அடக்கம்
வறுமை நிலையில் இருந்த பேத்தி கார்த்திகா தனது பாட்டியின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். இதை தொடர்ந்து அவர் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களிடம் உதவி நாடி தனது பாட்டியின் உடலை அடக்கம் செய்ய உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் மூதாட்டி செல்லம்மாளின் உடலை ஆம்புலன்சில் எடுத்துச் சென்று இந்து மத வழக்கப்படி அடக்கம் செய்தனர்.
பொதுமக்கள் பாராட்டு
இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்் இஸ்லாமிய இளைஞர்களை பாராட்டினர்.