'இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் அல்ல, தமிழர்கள்' - சீமான்
'இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் அல்ல, அவர்கள் தமிழர்கள்' என்று சீமான் கூறினார்.;
சென்னை,
சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்றைக்கு கணக்கில் அடங்காத மது, ஊழல்-லஞ்சம், கொலை-கொள்ளை, கனிம வளச்சுரண்டல் நடக்கிறது. இதையெல்லாம் சகித்து கொள்பவன் யார்?.
இஸ்லாமும், கிறிஸ்துவமும் அநீதிக்கு எதிராக பிறந்தது. ஆனால் இன்றைக்கு நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ்., பா.ஜ.க. என்று மாறி மாறி நடைபெறும் அநீதியான ஆட்சியை எப்படி சகித்துக் கொள்கிறீர்கள்?.
நான் 2016, 2019-ம், 2021-ம் ஆண்டு தேர்தலில் நின்றேன். ஆனால் நீங்கள் எனக்கு ஓட்டு போடவில்லை. நான் கோபப்படவில்லை. ஆனால் திரும்பவும் நீங்கள் இதே தவறை செய்வீர்கள் என்று தெரியும் போது எனக்கு கோபம் வருமா, வராதா?. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு தி.மு.க., காங்கிரஸ் கட்சி செய்த ஒரே ஒரு நன்மையை சொல்ல முடியுமா?
மதம், சாதி என எல்லா அடையாளங்களையும் விட மொழி, இனம் தான் பெரும்பான்மை. எனவே இங்கே இருக்கிற இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தமிழர்கள். எனவே இனிமேல் சிறுபான்மையினர் என்று யாராவது சொன்னால், அவர்களை அடிப்பேன். நான் வெறி கொண்டு விடுவேன்.
கட்சிகளில் சிறுபான்மை அணி என்று இருப்பதையும் வெறுக்கிறேன். அரசியலமைப்பு சட்டத்தில் சிறுபான்மை என்று சொல்வதை எதிர்க்கிறேன். மதத்தின் அடிப்படையில் மனிதர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது தவறு. மதம் மாறிக் கொள்ள கூடியது. மொழி, இனம் மாறிக் கொள்ள முடியாது.
இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, போன்றவர்கள் முன்பு பெரும்பான்மை. இப்போது சிறுபான்மையா?. இளையராஜா பெரும்பான்மை, அவருடைய மகன் யுவன் சங்கர் ராஜா சிறுபான்மை என்பது போன்ற பைத்தியகாரத்தனம் உலகில் வேறு எங்கேயாவது இருக்கிறதா?.
நாம் தமிழர் கட்சியில் சிறுபான்மை அணி என்பதே கிடையாது. எல்லா சாதி, மதத்தையும் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடம் கொடுத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.