சாந்தன், முருகனை திருச்சி முகாமில் இருந்து விடுவிக்க நடவடிக்கை
இலங்கை துணை தூதரகம் ஆவணங்களை வழங்கினால் மட்டுமே முருகனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும் என மத்திய அரசு தெரிவித்தது.;
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கைதிகளாக இருந்த பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார் உள்பட 7 பேரை விடுதலை செய்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இவர்களில் இலங்கையை சேர்ந்த சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் தங்களை முகாமில் இருந்து விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதில் சாந்தன் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சாந்தனை இலங்கைக்கு அனுப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய-மாநில அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே முருகனும் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், லண்டனில் வசிக்கும் தனது மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், அதற்காக பாஸ்போர்ட் பெற திருச்சி சிறப்பு முகாமில் இருந்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் அழைத்து செல்ல உத்தரவிடக்கோரி இருந்தார்.
அப்போது மத்திய அரசு தரப்பில், முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது எனவும், இலங்கை துணை தூதரகம் ஆவணங்களை வழங்கினால் மட்டுமே இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பயண ஆவணம் வழங்குவதற்கான நேர்காணலுக்கு முருகனை இலங்கை துணை தூதரகம் அழைக்கும்போது அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் இன்னும் ஓரிரு தினங்களில் முருகன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து பலத்த பாதுகாப்புடன் இலங்கை துணை தூதரகம் அழைத்து செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் முகாமில் உள்ள ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 2 பேரையும் விடுவிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக சிறப்பு முகாம் வட்டார தகவல்கள் தெரிவித்தன.