தேனி போலீசாருக்கு சவால் விடும் கொலை-கொள்ளை வழக்குகள்

தேனி போலீசாருக்கு சவால் விடும் வகையில் பல்வேறு கொலை-கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Update: 2023-02-08 20:30 GMT

தேனி மாவட்ட போலீசார் பல்வேறு யுக்திகளுடன் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா விற்பனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வெளிமாநில வியாபாரிகளையும் தேனி தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

போலீசுக்கு சவால்

சைபர் குற்றங்களில் ஈடுபட்ட வெளி மாநில மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மோசடி நபர்களையும் துணிச்சலுடன் கைது செய்து சிறைப்படுத்தினர். கஞ்சா தடுப்பு நடவடிக்கை, சைபர் கிரைம் குற்றவாளிகளை கைது செய்தல் போன்றவற்றில் பல மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக தேனி மாவட்ட போலீசார் திகழ்கின்றனர்.

அதே நேரத்தில் பல ஆண்டுகளாக தேனி மாவட்ட போலீசாருக்கு சவால் விடும் வழக்குகளும் ஏராளம் உள்ளன. கொலை, கொள்ளை வழக்குகளில் நீண்டகாலமாக துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். அந்த வகையில், தேனி மாவட்ட போலீசாருக்கு சவாலாக மாறியுள்ள சில வழக்குகளை பற்றி பார்ப்போம்:-

வனப்பகுதியில் பெண் பிணம்

மேகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட கோம்பைத்தொழு பீட், உடங்கல் அருகே உள்ள கன்னிமார் ஓடைப்பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு மே 7-ந்தேதி வனத்துறையினர் ரோந்து சென்ற போது அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. அரை நிர்வாண கோலத்தில் அந்த பிணம் கிடந்தது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்ததால் அந்த பெண் யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை.சம்பவ இடத்தில் சிம் கார்டு, எரிந்த நிலையில் செருப்பு மற்றும் பேக், சிகரெட் துண்டுகள் போன்றவை கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். 9 ஆண்டுகள் கடந்த பின்னும் கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்? என்று அடையாளம் காணப்படவில்லை. போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஹைவேவிஸ் போலீசார் இதுகுறித்து பதிவு செய்த வழக்கு விசாரணையும் முடங்கிக் கிடக்கிறது.

கணவாய் மலைப்பகுதியில் கொலை

ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்ததை வனத்துறையினர் ரோந்து சென்ற போது பார்த்தனர். உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். ஆண்டிப்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கிலும் கொலை செய்யப்பட்ட நபர் யார்? என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொலை செய்யப்பட்ட நபரே யார் என்று தெரியாத நிலையில் கொலையாளிகள் யார்? என்றும் தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர். பல்வேறு வகைகளில் முயற்சித்தும் இந்த வழக்கில் போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை.

அனுமந்தன்பட்டி தம்பதி

உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 80). அவருடைய மனைவி சிவகாமி (73). இவர்கள் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி தங்களின் வீட்டில் உள்ள கட்டில்களில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். யாரோ மர்ம நபர்கள் அவர்களை கட்டி வைத்து, தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்து இருப்பதாக கூறப்பட்டது.

உத்தமபாளையம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கொலையாளிகள் யார்? கொலை செய்ய காரணம் என்ன? என்ற எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த இரட்டை கொலை வழக்கிலும் துப்பு துலங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

போடி தொழிலாளி கொலை

போடி நகராட்சி குடியிருப்பு பொன்னம்பலம் தெருவை சேர்ந்தவர் ஜீவா (51). இவர், போடி நகராட்சியில் பரமசிவன் கோவில் அருகில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் திறந்து விடும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவர் புதிதாக ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளில் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி வேலைக்கு சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், பரமசிவன் கோவில் செல்லும் மண் சாலையில் உள்ள கழிவுநீர் ஓடைக்கு மேற்கு பகுதியில் அவர் மார்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு ரத்தக் காயத்துடன் பிணமாக கிடந்தார். அவருடைய மோட்டார் சைக்கிள் மாயமானது. இந்த சம்பவம் குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் இதுவரை போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை.

அதுபோல், தேனி அருகே டொம்புச்சேரியில் கடந்த 2011-ம் ஆண்டு பெண் கொலை வழக்கு, குரங்கணி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த 2 கொலை வழக்குகள் உள்பட மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் எந்த துப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக போலீசார் திணறி வருகின்றனர். சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டதால், இத்தகைய வழக்குகள் முடங்கிக்கிடக்கின்றன.

கொள்ளை சம்பவங்கள்

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன். இவர் தேனியில் கார், மோட்டார் சைக்கிள்களுக்கான பேட்டரி விற்பனை கடை வைத்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார் 200 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்திய போதிலும் இதுவரை கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை.

தேனி பங்கஜம் ஹவுஸ் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (75). இவர் தேனியில் மஞ்சள் தூள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை வைத்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். இந்தநிலையில் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 60 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். தேனி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்திலும் இதுவரை துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். இதுபோன்று மாவட்டத்தில் பல கொள்ளை, திருட்டு வழக்குகளும் முடங்கிக் கிடக்கின்றன. கொள்ளையர்கள் கைது செய்யப்படாததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இழந்த பணம், நகைகள் திரும்ப கிடைக்காத நிலை நீடிக்கிறது.

உட்கோட்ட அளவில் தனிப்படைகள்

தேனி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளில் துப்பு துலக்கி விசாரணையை தீவிரப்படுத்தவும் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக போலீஸ் சூப்பிரண்டு நேரடி கண்காணிப்பில், உட்கோட்ட அளவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மாவட்டத்தில் உட்கோட்ட அளவில் மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையினர் கொலை, கொள்ளை வழக்குகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதுபோல், போலீஸ் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டங்களின் போதும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், அவற்றின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்வதோடு, பல்வேறு அறிவுரைகளும் வழங்கி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

சென்னை போலீசுக்கு உதவிய தேனி தனிப்படையினர்

ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த கொலை வழக்கில் இதுவரை கொலை செய்யப்பட்டவர் யார் என்றே கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் பாட்ஷா தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், தமிழகம் முழுவதும் விசாரணை நடத்தினர். அப்போது, இறந்தவரின் புகைப்படத்தை ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற விவரங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஒருவரின் முக சாயல், இறந்தவரின் முகசாயலுடன் ஒத்துபோனது. இதனால் அந்த நபர் குறித்த விசாரிக்க சென்னைக்கு தேனி தனிப்படையினர் சென்றனர். அப்போது அந்த நபர் மாயமாகி இருப்பதும், அவரை காணவில்லை என்று சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதும் தெரியவந்தது. இதனால், கொலை செய்யப்பட்ட நபரும், மாயமான நபரும் ஒரே நபராக இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தேனி தனிப்படையினரின் புலனாய்வில் சென்னையில் மாயமான நபர் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்டார். சென்னை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத நபரை தேனி போலீசார் கண்டுபிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் இறந்து கிடந்த நபர் யார் என்பது குறித்து இதுவரை துப்பு எதுவும் கிடைக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்