சேந்தமங்கலம் அருகே கள்ளத்தொடர்பு தகராறில்ஜோதிடர் கத்தியால் குத்திக்கொலைதறித்தொழிலாளி கைது
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே கள்ளத்தொடர்பு தகராறில் ஜோதிடர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தறித்தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கருத்து வேறுபாடு
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 60). ஜோதிடர். இவருடைய மனைவி பேபி (50). இவர்களுக்கு நிரேஷ் குமார் (34), சிமல் (28) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சுந்தர்ராஜன் மனைவியை பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் வேறு ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் சுந்தர்ராஜன் வீட்டில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கள்ளத்தொடர்பு
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் செபி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடி சென்ற நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார் சுந்தர்ராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த காலத்தில் சுந்தர்ராஜனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.
கைது
இதற்கிடையே சேந்தமங்கலம் அருகே சாலையூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி (23) என்பவர் கொண்டமநாயக்கன்பட்டியில் தறிப்பட்டறை நடத்தி வந்தார். அங்கு 50 வயது பெண் வேலைக்கு சென்று வந்தார். அதில் கார்த்திக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக ெதரிகிறது. இதனை அறிந்த சுந்தர்ராஜன், கார்த்தியிடம் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தி, சுந்தர்ராஜனை கத்தியால் குத்திக்கொலை செய்திருக்கலாம் என தெரியவருகிறது.
அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் பதுங்கி இருந்த தறிப்பட்டறை தொழிலாளி கார்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் விசாரணை முடிந்த பிறகே முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். கள்ளத்தொடர்பு தகராறில் ஜோதிடர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.