நாமக்கல்லில் பயங்கரம்தொழிலாளி குத்திக்கொலைஅண்ணன் மகன், நண்பர்களுடன் வெறிச்செயல்

Update: 2023-01-30 18:45 GMT

நாமக்கல்லில் நிலத்தகராறில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன் மகன் உள்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலித்தொழிலாளி

நாமக்கல் பெரியப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு தன்ஷிகா (11) என்ற மகளும், சூர்யா (9) என்கிற மகனும் உள்ளனர். ஆறுமுகத்தின் அண்ணன் முருகன் குடும்பத்திற்கும், இவருடைய குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இதை கேள்விப்பட்ட ஆறுமுகம் துக்கம் விசாரிக்க நேற்று முன்தினம் அண்ணன் முருகன் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார். அப்போது அண்ணன் மகன் விஜய் அவரிடம், ஏன், இங்கு வந்தீர்கள்? எனக்கேட்டு தகராறு செய்தார். இதையடுத்து அங்கிருந்த உறவினர்கள் சமரசம் செய்து அனுப்பி உள்ளனர்.

குத்திக்கொலை

இதனைத்தொடர்ந்து இரவு ஆறுமுகம் வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டு இருந்தார். இரவு 11 மணி அளவில் கதவை தட்டும் சத்தம் கேட்டு ஆறுமுகம் கதவை திறந்து உள்ளார். அப்போது மர்ம நபர்கள் கத்தியால் ஆறுமுகத்தை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆறுமுகத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை குறித்து சரஸ்வதி நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

5 பேரை பிடித்து விசாரணை

இதைத்தொடர்ந்து கொலை நடந்த வீட்டிற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அண்ணன் மகன் விஜய் (வயது 19) தனது நண்பர்களுடன் சேர்ந்து சித்தப்பாவை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விஜய் உள்ளிட்ட 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் இறந்த நாளில் தம்பியும் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்