கொக்கு பிடிக்கும் தகராறில் கிரிக்கெட் மட்டையால் அடித்து மெக்கானிக் கொலை
கொக்கு பிடிக்கும் தகராறில் கிரிக்கெட் மட்டையால் அடித்து டி.வி. மெக்கானிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அலங்காநல்லூர்,
கொக்கு பிடிக்கும் தகராறில் கிரிக்கெட் மட்டையால் அடித்து டி.வி. மெக்கானிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொக்கு பிடிப்பதில் தகராறு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டகுடி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 38). டி.வி. மெக்கானிக்.
இவர் நேற்று முன்தினம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் உள்ள தனது உறவினரான முத்துசெல்வி (37) என்பவரின் வீட்டிற்கு வந்துள்ளார். இவரது வீட்டின் முன்னால் புளியமரம் ஒன்று உள்ளது.
அந்த மரத்தில் இளைஞர்கள் சிலர் நேற்று முன்தினம் கொக்கு பிடிப்பதற்காக வந்துள்ளனர். இதைப்பார்த்த ராமமூர்த்தி அவர்களிடம், இங்கு கொக்கு பிடிக்கக்கூடாது என கண்டித்துள்ளார். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
கிரிக்கெட் மட்டையால் அடித்தனர்
இதைதொடர்ந்து மீண்டும் இரவில் இது சம்பந்தமாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், ராமமூர்த்தியை கிரிக்கெட் மட்டையால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் ராமமூர்த்தி படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, ராமமூர்த்தி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அலங்காநல்லூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அழகாபுரியை சேர்ந்த பொய்யாமொழி (23), சிந்தனை செழியன் (19) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட ராமமூர்த்திக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். ஆனால், அவர் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.