ஊராட்சி செயலாளர் படுகொலை

மதுரை அருகே ஊராட்சி செயலாளர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-05-26 19:13 GMT

மதுரை, 

மதுரை அருகே ஊராட்சி செயலாளர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினர்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊராட்சி செயலாளர்

மதுரை அருகே உள்ள வரிச்சியூர் தச்சனேந்தல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 52). இடையப்பட்டி ஊராட்சி செயலாளராக இருந்து வந்தார். இவர் கருப்புக்கால் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாகவும் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில், லட்சுமணன் நேற்று காலை கோவிலுக்கு பூஜை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வரிச்சியூர்-தச்சனேந்தல் மெயின்ரோட்டில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் திடீரென லட்சுமணனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டது.

பின்னர், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் லட்சுமணனை, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

விசாரணை

வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய லட்சுமணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும்வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக கருப்பாயூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் லட்சுமணனுக்கும், அவருடைய உறவினருக்கும் சொத்து பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதுபோல், கோவிலில் மரியாதை செலுத்துவது தொடர்பாகவும் முன்விரோதம் இருந்துள்ளது.

இதன் காரணமாக இந்த படுகொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் லட்சுமணனின் உறவினர்கள் சிலரை பிடித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்