ஓசூர் அருகே பயங்கரம்:விவசாயி தலை துண்டித்து படுகொலைசிறுவன் உள்பட 3 பேர் போலீசில் சரண்
ஓசூர்:
ஓசூர் அருகே பணம் கொடுக்கல் வாங்கல், தகராறில் விவசாயி கத்தியால் வெட்டி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் உள்பட 3 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
கடன் பிரச்சினை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரிகை அடுத்த முதுகுறுக்கி பகுதியை சேர்ந்தவர் திம்மராயப்பா. இவருடைய மகன் திம்மராஜ் (வயது 27). விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் திருமலேஷ் (23) என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதில் குறிப்பிட்ட தொகையை திருப்பி செலுத்தியதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் திருமலேஷ் மீதி பணத்தை கேட்டு திம்மராஜை தொல்லை செய்து வந்தாராம். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் நேற்று சமாதானம் பேசுவதற்காக திம்மராஜை அப்பகுதியில் உள்ள மாந்தோப்புக்கு திருமலேஷ் அழைத்தார். அங்கு திருமலேஷ் தனது மற்ற நண்பர்களான கிஷோர் (19) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோருடன் நின்று இருந்தார்.
தலை துண்டித்து கொலை
எனினும் திம்மராஜ் முன்னெச்சரிக்கையாக கத்தி ஒன்றை மறைத்து வைத்து கொண்டு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து மாந்தோப்பில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த திருமலேஷ், திம்மராஜிடம் இருந்த கத்தியை பறித்து அவருடைய தலையை வெட்டினார். இதில் தலை துண்டிக்கப்பட்டு திம்மராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதைப்பார்த்ததும் 3 பேரும் அங்கிருந்து சென்று பாகலூர் போலீசில் சரண் அடைந்தனர். மேலும், போலீசாரிடம் திம்மராஜ் தன்னை தாக்க வந்ததாகவும், அதனால் தன்னை காப்பாற்றி கொள்ள அவரிடம் இருந்து கத்தியை பறித்து திம்மராஜ் தலையை வெட்டிவிட்டதாகவும் திருமலேஷ் கூறினார். பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் விசாரணை
இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையுண்ட திம்மராஜின் உடல் மற்றும் தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் விவசாயி கத்தியால் வெட்டி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.