வெள்ளகோவில் அருகே பெண்ணுடனான கள்ளத்தொடர்பை வௌியே கூறியதால் ஆத்திரம் அடைந்த வேன் டிரைவர் கோவில் பூசாரியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவில் பூசாரி
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள வேளகவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 51). இவர் அந்த பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவில் பூசாரியாக இருந்தார். மேலும் ஆடு, மாடுகள் மேய்த்தும், கூலி வேலையும் செய்து வந்தார். இவருடைய மனைவி மல்லிகா (45). இவர் வெள்ளகோவில் நகராட்சியில் பகுதி நேர துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மோகன்ராஜ் மற்றும் சுகன் என்ற 2 மகன்கள் உள்ளனர். மல்லிகா கடந்த 3-ந்தேதி வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது மாரிமுத்து வீட்டில் இல்லை. அவர் எங்கேயாவது கோவிலில் பூஜைக்கு சென்று இருக்கலாம், பூஜை முடிந்ததும் வந்து விடுவார் என மல்லிகா இரவு வரை காத்திருந்தார். ஆனாலும் மாரிமுத்து வரவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொள்ள முயன்ற போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு எங்கு தேடியும் மாரிமுத்துவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து மல்லிகா வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்ேபாது அதே பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் பிரேம்குமார் (32) என்பவருடன் தனது தந்தை பேசிச்கொண்டிருந்ததை பார்த்ததாக இளைய மகன் சுகன் கூறியுள்ளார்.
கழுத்தை நெரித்து கொலை
இதனால் போலீசார் பிரேம்குமாரை பிடித்து விசாரித்தனர். அப்ேபாது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், மாரிமுத்துவை கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை தனது வேனில் வெள்ளகோவில் அக்கரைபாளையம் அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று கரையோரம் வீசி விட்டதாக பிரேம்குமார் கூறினார். இதையடுத்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து காங்கயம் போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் பிரேம்குமாரை அமராவதி ஆற்றங்கரைக்கு கூட்டிச்சென்று மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவர் கைது
வேன் டிரைவர் பிரேம்குமாருக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை. இதற்கிடையில் வேளகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பிரேம்குமாருக்கு தொடர்பு இருந்துள்ளது. இந்த தொடர்பு பற்றி மாரிமுத்து வெளியில் சொன்னதால் முன்விரோதத்தில் அவரை பிரேம்குமார் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
கைதான பிரேம்குமாரை காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.