சீரான முறையில் குடிநீர் வழங்க புதிய ஆழ்குழாய் அமைக்க நடவடிக்கை-தொண்டி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சீரான முறையில் குடிநீர் வழங்க புதிய ஆழ்குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொண்டி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update:2023-03-24 00:15 IST

தொண்டி

சீரான முறையில் குடிநீர் வழங்க புதிய ஆழ்குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொண்டி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாதாரண கூட்டம்

தொண்டி பேரூராட்சியில் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். பேரூராட்சி அலுவலர் ரவி வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் கொண்டுவந்த தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

தொண்டி பேரூராட்சி பகுதியில் முடிச்சிலான் தோப்பு செல்லும் பாதையை சுத்தம் செய்து பாதையில் கிராவல் மண் போட்டு சீரமைத்தல், தொண்டி பேரூராட்சிக்கு சொந்தமான காந்திநகரில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு புதிதாக மின் மோட்டார் மற்றும் குழாய் இணைப்பு அமைத்தல், தொண்டி பேரூராட்சிக்கு சொந்தமான வளம் மீட்பு பூங்கா பின்புறம் உள்ள இடத்தில் கல்லுக்கால் கம்பி வேலி அமைத்தல், தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வட்டானம் ரோடு பாவோடி நிழற்குடை பின்புறம் உள்ள காலி இடத்தில் ஆதார் மையக் கட்டிடம் கட்டுவது எனமுடிவு செய்யப்பட்டது.

மேலும் தொண்டி பேரூராட்சி முடிச்சிலான் தோப்பில் உள்ள நான்கு கிணற்றை மராமத்து பணி செய்து புதிய மின் மோட்டார் அமைத்தல் மற்றும் மின் மோட்டார் உள்ள அறையை பழுது பார்த்தல் போன்ற பணிகள் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்வது, தொண்டி பேரூராட்சிக்கு சொந்தமான சேந்தனி கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் பழுதடைந்து விட்டதால் அதன் அருகில் புதிதாக ஆழ்குழாய் மற்றும் புதிதாக மின்மோட்டார் அமைத்தல். போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்

இதேபோல் தொண்டி பேரூராட்சி 1-வது வார்டு உறுப்பினர் ஜெனிபர் நிஷா பி.வி.பட்டினத்தில் பொது கழிப்பறை அமைக்க வேண்டும்.

தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பி.வி.பட்டினத்தில் தாளாவூருணி சுற்றி உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதைதொடர்ந்து பேரூராட்சி கவுன்சிலர்களின் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது.

கூட்டத்தில் தொண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்