ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் வெண்டைக்காய் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு கமிஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது ஒட்டன்சத்திரம் பகுதியில் பயிரிடப்பட்ட வெண்டைக்காய்கள் அறுவடை பணி நடந்து வருகிறது. இதனால் மூட்டை, மூட்டையாக வெண்டைக்காய்களை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனையானது. ஆனால் தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கடை வைத்துள்ள மணிகண்டன் கூறுகையில் 'நம் மாநில மக்களை விட, கேரள மக்கள் வெண்டைக்காய்களை விரும்பி உண்கின்றனர். தற்போது ரம்ஜான் தொடங்கி உள்ளதால், கேரளாவில் விற்பனை குறைந்து விட்டது. இதனால் கேரள வியாபாரிகள், வெண்டைக்காய்களை கொள்முதல் செய்வது குறைந்து விட்டது. இதுவே விலைவீழ்ச்சிக்கு முக்கிய காரணம் ஆகும்' என்றார்.