முதுமலை முகாமில் வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கீடு
முதுமலை முகாமில் வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கீடும் பணி நடைபெற்றது.
கூடலூர்
முதுமலை முகாமில் வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கீடும் பணி நடைபெற்றது.
வளர்ப்பு யானைகள் பராமரிப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் முகாம்களில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை, மாலை நேரத்தில் ஊட்டச்சத்து உணவுகளும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து யானைகளின் உடல் நலனை கண்காணிக்க கால்நடை மருத்துவ குழுவினரும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை வளர்ப்பு யானைகளின் உடல் எடையை வனத்துறையின் கால்நடை மருத்துவ குழு ஆய்வு செய்து வருகிறது.
தொடர்ந்து எடை குறைந்த வளர்ப்பு யானைகளை தனி கவனம் செலுத்தி பராமரிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கீடு செய்யப்பட்டது. சராசரியாக 100 கிலோ வரை சில யானைகளின் உடல் எடை குறைந்து இருந்தது. வறட்சியால் பசுந்தீவன தட்டுப்பாடு நிலவியதால் உடல் எடை குறைவுக்கு காரணம் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உடல் எடை கணக்கீடு
இந்த நிலையில் முதுமலை வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கீடு செய்யும் பணி நேற்று காலை 10 மணிக்கு கூடலூர் தொரப்பள்ளியில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே உள்ள எடை மையத்தில் நடைபெற்றது. முதற்கட்டமாக சங்கர், கணேஷ், ஜம்பு, வில்சன், சுமங்கலா, ஜான், இந்திரா, உதயன், காமாட்சி, பொம்மி ஆகிய யானைகளின் உடல் எடை கணக்கீடு செய்யப்பட்டது.
இதில் சுமார் 150 கிலோ வரை யானைகளின் உடல் எடை அதிகமாகி உள்ளது தெரிய வந்தது. மீதமுள்ள வளர்ப்பு யானைகளுக்கு 2 - வது கட்டமாக உடல் எடை கணக்கீடு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதி பசுமையாக மாறி உள்ளது. இதனால் வனவிலங்குகள் மட்டுமின்றி வளர்ப்பு யானைகளுக்கும், பசுந்தீவனம் தட்டுப்பாடு இன்றி கிடைக்கிறது. இதனால் வளர்ச்சி அணுகின் உடல் எடையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.