ஆற்றில் இருந்த மண் திட்டுகளை அகற்றிய விவசாயிகள்
தென்னடார் பகுதிகளில் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டதால் முள்ளியாற்றில் இருந்த மண் திட்டுகளை விவசாயிகள் அகற்றினர்.
வாய்மேடு:
தென்னடார் பகுதிகளில் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டதால் முள்ளியாற்றில் இருந்த மண் திட்டுகளை விவசாயிகள் அகற்றினர்.
மழைநீர் வடிவதில் சிரமம்
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் தாணிக்கோட்டகம், வாய்மேடு, பஞ்சநதிக்குளம், தகட்டூர், தென்னடார் உள்ளிட்ட பகுதியில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கிய நெற்பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்தன.
தற்போது மழை நின்றதால் வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிய தொடங்கி வருகிறது. ஒரு சில இடங்களில் வாய்க்கால் மற்றும் ஆறுகளில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் ஆறுகளில் உள்ள மண் திட்டுகளால் தண்ணீர் செல்வதில் தேக்கம் ஏற்பட்டது.
மண் திட்டுகள் அகற்றம்
இந்த நிலையில் தென்னடாரில் முள்ளியாற்றில் இருந்து கடலில் தண்ணீர் கலக்கும் பகுதியான கண்டி என்ற இடத்தில் இருந்த மண் திட்டுகளை விவசாயிகள் அகற்றினர். இதனால் தண்ணீர் தடையின்றி கடலுக்குசென்றது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வாய்மேடு, தகட்டூர், மருதூர் உள்ளிட்ட பகுதியில் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு முள்ளியாறு, மானங்கொண்டானாற்றில் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி கிடப்பதால் வெள்ளநீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இந்த ஆகாய தாமரை செடிகளை அகற்றினால் தடையின்றி தண்ணீர் சென்று கடலில் கலந்து விடும் என்றனர்.