திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் நகரும் படிக்கட்டுகள் தயார்

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் நகரும் படிக்கட்டுகள் தயார் நிலையில் உள்ளன. அதன் அருகே லிப்ட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-08-02 18:54 GMT

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் நகரும் படிக்கட்டுகள் தயார் நிலையில் உள்ளன. அதன் அருகே லிப்ட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நகரும் படிக்கட்டுகள்

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அழகுபடுத்தும் விதத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பார்சல் அலுவலகத்தில் இருந்து கல்லுக்குழி வரை நடைபாதை மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 1-வது நடைமேடை முதல் 8-வது நடைமேடை வரை பயணிகள் ஏறி, இறங்கி செல்லும் வகையில் இந்த நடைபாதை மேம்பாலம் உள்ளது.

இந்த நடைபாதைமேம்பாலத்தில் ஏறி, இறங்க அதிக படிகள் இருப்பதால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இதனால் அனைத்து நடைமேடைகளுக்கு செல்ல வசதியாக நகரும் படிக்கட்டுகள் அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நடைபாதை மேம்பால படிக்கட்டுகளில் ஏறுவதற்கு மாற்று வசதியாக அதன் அருகே நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்க திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

லிப்ட் வசதி

அதன்படி ரெயில்வே பார்சல் அலுவலகம் அருகே ஒரு நகரும் படிக்கட்டும், முதலாவது, 2-3, 4-5, 6-7 மற்றும் 8-வது நடைமேடைகளில் தலா ஒரு நகரும் படிக்கட்டுகளும் அமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. தலா ரூ.1 கோடி செலவில் இந்த நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது. தற்போது, அதன் அருகிலேயே லிப்ட் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், "நடைபாதை மேம்பாலத்துக்கு செல்ல வசதியாக நகரும் படிக்கட்டுகள், லிப்ட் அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன. பயணிகள் 'லிப்ட்' மற்றும் நகரும் படிக்கட்டுகள் வசதியையும் பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோல பார்சல் அலுவலகம் அருகே டிக்கெட் வினியோக மையமும் அமைக்கப்பட உள்ளது. நடைபாதை மேம்பாலம் வழியாக செல்பவர்கள் இதில் டிக்கெட் பெற்று ரெயிலில் பயணிக்க முடியும். தற்போது உள்ள டிக்கெட் மையத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், நடைபாதை மேம்பாலம் வழியாக செல்பவர்களுக்கு வசதியாகவும் இந்த டிக்கெட் வினியோக மையம் அமைக்கப்பட உள்ளது." என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்