75 ஆண்டுகள் ஆகியும் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மலைக் கிராம மக்கள்

அணைக்கட்டு தாலுகாவில் அடிப்படை வசதிகள் இன்றி 72 மலைக் கிராம மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ேவண்டும்.

Update: 2022-06-22 18:14 GMT


அணைக்கட்டு தாலுகாவில் அடிப்படை வசதிகள் இன்றி72 மலைக் கிராம மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ேவண்டும்.

72 மலைக் கிராமங்கள்

வேலூர் தாலுகாவில் இருந்து 2013-ம் ஆண்டு அணைக்கட்டை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. அணைக்கட்டு தாலுகாவில் மலைக்கிராமங்கள் அதிகமாக உள்ளன. அதில் ஒடுகத்தூரை அடுத்து பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்த்தான் கொல்லை உள்ளிட்ட 3 ஊராட்சிகளில் 72 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

தனித் தாலுகாவாக அறிவிக்கப்பட்டதும் அணைக்கட்டில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், அங்கு போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகளை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பும் அவல நிலை தொடர்கிறது.

மண் பாதைகள்

குறிப்பாக, அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட பீஞ்சமந்தை, ஜார்த்தான்கொல்லை, பலாம்பட்டு ஆகிய 3 ஊராட்சிகளில் உள்ள மலைக்கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமானால் கீழ்கொத்தூர், பெரியஏரியூர், முத்துக்குமரன் மலை உள்ளிட்ட 3 மலையடிவார கிராமங்களை கடந்து கரடுமுரடான பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும். மலையடிவாரத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரமுள்ள மலைப்பாதைகள் அனைத்தும் மண் பாதைகளாகவே உள்ளன.

இதில் முத்துக்குமரன் மலையடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை வரை செல்லக்கூடிய பாதை 8 கிலோ மீட்டர் தூரம் என்பதால் பெரும்பாலான மக்கள் அந்தப் பாதை வழியாகவே பீஞ்சமந்தைக்குச் சென்று வருகின்றனர். பீஞ்சமந்தையில் அரசு உயர்நிலைப்பள்ளி, உண்டு உறைவிடப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு நடுநிலைப்பள்ளிகள், தபால் நிலையம், அரசு மாணவர் விடுதி, குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட அனைத்து வசதிகள் இருந்தும் மலைஅடிவாரத்தில் இருந்து செல்ல சரியான பாைத வசதி இல்லை. இதனால் 3 ஊராட்சிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மருத்துவ வசதி இல்லை

இரவில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டாலும், பாம்பு கடித்து விட்டாலும் அவசர மருத்துவச் சிகிச்சைக்கான வசதிகள் எதுவும் மலைக்கிராமங்களில் இல்லை.

மேலும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளையும், நிறைமாத கர்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டாலும் இரவில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி மலையடிவாரத்துக்குத் தூக்கி வந்து சிகிச்சை அளித்து வரும் அவலநிலையே இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே பல தலைமுறைகளாக அப்பகுதியில் மலைக் கிராம மக்கள் வசித்து வருகின்றனர். நூற்றாண்டுகளைக் கடந்தும் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து அங்கு வசித்து வரும் மக்கள் இதுவரை தார்சாலை வசதி இன்றி தங்கள் அவசரத்துக்கு மாவட்ட தலைநகரான வேலூர் மற்றும் தாலுகா தலைநகரான அணைக்கட்டு மற்றும் பெரிய ஊரான ஒடுகத்தூர் ஆகிய ஊர்களுக்கு வர இயலாத நிலை உள்ளது. சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட மலைமீது வருவதில்லை. இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும் என மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை

இந்தநிலையில் மலைவாழ் மக்களின் பல கட்ட போராட்டங்களுக்கு பின் 2014-2015 ம் ஆண்டு வனத்துறை சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் சாலை போடப்பட்டது. மலைப் பகுதிகளுக்கு தார்சாலை அமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் ரூ.5 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முத்துக்குமரன் மலையடிவாரத்தில் இருந்து பீஞ்சமந்தை வரை தார் சாலை அமைக்கப்படும், எனக் கூறினார். ஆனால், இன்றுவரை அந்தப் பணிகள் நடக்காமல் வெறும் அளவீடு செய்யும் பணியிலேயே உள்ளது. மலைக்கிராமங்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை உடனடியாக அரசுத்துறை அதிகாரிகள் செய்து தரவேண்டும் என்பது கோரிக்ைகயாக உள்ளது.

சாலை அமைக்கப்படும் பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் வனத்துறை சாலை அமைக்கவிடாமல் தடுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின் படி அதுவும் தேவையில்லை, என்ற நிலை ஏற்பட்டது. ஆனாலும் சாலை வசதி என்பது 72 மலைக் கிராம மக்களுக்கு கனவாகவே உள்ளது.

சிறுதானியம் உற்பத்தி

மலைக் கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக்கொள்ள சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த முகாந்திரமும் மலைப்பகுதியில் இல்லை. மலைப்பகுதியில் கம்பு, கேழ்வரகு, சாமை போன்ற சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து தங்களின் உணவு ேதவையை பூர்த்தி ெசய்து கொள்கின்றனர்.

பெரும்பாலான மலைக் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்குச் சென்று கூலி வேலை செய்து வருகிறார்கள். அவ்வாறு ெவளியூர் செல்லும் மலைக்கிராம மக்கள் அங்கிருந்து 6 மாதத்துக்கு ஒருமுறை தங்களின் சொந்த ஊரான மலைக்கிராமங்களுக்கு வந்து ெசல்கின்றனர். பொருளாதார வசதி இல்லாததால் அவர்கள் சட்டத்துக்குப் புறம்பான செயல்களிலும் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

குழந்தை திருமணம்

மலைக் கிராமங்களில் அதிகளவில் குழந்தை திருமணம் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. குழந்தை திருமணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், சம்பந்தப்பட்ட மலைக் கிராமங்களுக்கு அதிகாரிகள் உடனடியாக நேரில் செல்ல ேவண்டும். அதற்கு போதிய சாலை வசதி இல்லாததால் அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

மலைக் கிராமங்கள் வளர்ச்சி அடையாமல் இருப்பது, போதிய அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் அரசு அதிகாரிகள் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பது போன்றவை குறித்து மலைக் கிராம மக்கள் கூறியதாவது:-

தார் சாலை வசதி

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்தும் நாங்கள் மலைக் கிராமங்களில் வசித்து வருகிறோம். நாங்கள் முறையான சாலை வசதியின்றி பல இன்னல்களை அனுபவித்து வருகிறோம். சாலை இல்லாத காரணத்தால் அவசர சிகிச்சைக்கு இதுவரை ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் கூட மலைக் கிராமங்களுக்கு வந்ததே இல்லை. இதனால் அதிக உயிரிழப்புகளை பார்த்து விட்டோம்.

கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்துத் தேவைகளுக்கும் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைப் பெறவும் சாலையே தடையாக உள்ளது. இதுநாள்வரை உயிரிழந்த தலைமுறையினர் சாலையை பார்க்கவில்லை. உயிரோடு இருக்கும் நாங்கள் சாலை வசதியின்றி அதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். டோலி கட்டி தூக்கிச் செல்லும் நிலைமாறி நாங்கள் சிரமமின்றி அடிவாரம் சென்று மேலே திரும்பி வர பல ஆண்டு கால கோரிக்கையான முத்துக்குமரன் மலை, பீஞ்சமந்தை மலைக் கிராமங்களுக்கு தார் சாலை வசதி செய்து, எங்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.

கல்வி

மலைமீதுள்ள பள்ளிகளுக்கு வாரத்துக்கு இரு முறை ஆசிரியர்கள் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகின்றனர். நல்ல மனம் படைத்த ஆசிரியர்கள் தங்களின் இரு சக்கர வாகனத்தில் மாணவர்களை பல்வேறு கிராமங்களில் இருந்து அழைத்து வந்து கல்வி கற்றுக் கொடுக்கிறார்கள். இதுபோன்ற ஒரு சில நல்ல ஆசிரியர்கள் இருப்பதால் தான் தற்போது மலைக் கிராமங்களில் உள்ள மாணவர்கள் 10-ம் வகுப்பு வரை கட்டாயம் படிக்கும் நிலை வந்துள்ளது.

தொடர்ந்து அவர்கள் மேல்படிப்பு படிக்க வேண்டுமென்றால் சாலை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் பல்ேவறு மலைக் கிராமங்களை இணைக்கும் சாலைகளையும் அமைத்துத் தர ேவண்டும். எந்த நேரத்திலும் மலைக் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு எளிதில் வர மலைக் கிராமங்களில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

பயிர் சாகுபடிக்கு கடனுதவி

வேளாண் பயிர் சாகுபடி செய்ய மலைக் கிராம மக்களுக்கு வங்கிகள் தாராளமாக கடனுதவி வழங்க வேண்டும். இயற்கை சூழல் அதிகமாக உள்ள மலையில் அதிக லாபம் ஈட்டக்கூடிய பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் முகாமிட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அரசு அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட்டால் அவர்களுடைய வாழ்க்கை தரம் உயரும் என்பதில் ஐயமில்லை.

Tags:    

மேலும் செய்திகள்