சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
வடுவூர் பகுதியில் சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
வடுவூர்:
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் வடுவூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு தொடக்கப்பள்ளி செல்லும் சாலை, கோதண்டராமர் கோவில் முன்புறம் உள்ள சாலை, தெப்பக்குளத்தின் கீழ்புறம் உள்ள சாலை ஆகியவை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடுவூர் பகுதியில் சேறும், சகதியுமான சாலைகளை சீரமைத்து புதிதாக தார்சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.