மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; வாலிபர் பலி

பொள்ளாச்சி-உடுமலை சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-02 18:45 GMT

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சி-உடுமலை சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டிரைவர் பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 28), டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. இந்தநிலையில் நேற்று வங்கியில் பணம் செலுத்தி விட்டு, நல்லாம்பள்ளி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் சின்னாம்பாளையம் பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பில் விக்னேஷ் விழுந்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சாலை மறியல்

இதற்கிடையில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உடுமலை ரோட்டில் விபத்துகள் அதிகரித்து உள்ளதாகவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்றனர். இதற்கிடையில் அந்த வழியாக வந்த மற்றொரு லாரியின் கண்ணாடியை ஒருவர் தாக்கியதில், கண்ணாடி லேசாக உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து மின் மயானம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மணிக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, சப்-கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதன்பிறகு மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

டிரைவரிடம் விசாரணை

மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் சிவகங்கையை சேர்ந்த ராமு (40) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, உடுமலை ரோடு இருவழிச்சாலையாக இருந்த போது விபத்துகள் குறைவாக நடந்தது. ஆனால், நான்கு வழிச்சாலையாக மாற்றிய பிறகு விபத்துகள் அதிகரித்து உள்ளது. சாலை குறுகலாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. பஸ், லாரி போன்ற வாகனங்கள் லேசாக மோதினால் தடுப்பு கம்பியில் விழுந்து உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விபத்துகளை தடுக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்