மோட்டார் சைக்கிள் திருடியவர் கையும் களவுமாக சிக்கினார்
மோட்டார் சைக்கிள் திருடியவர் கையும் களவுமாக சிக்கினார்;
குடியாத்தம்,
குடியாத்தத்தில் மோட்டார்சைக்கிள் திருடியவர் கையும் களவுமாக சிக்கினார்.
குடியாத்தம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டு வந்தன.
இதனை தொடர்ந்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், ஏட்டுகள் ஜெயக்குமார், சந்திரபாபு உள்ளிட்ட தனிப்படையினர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை தீவிர ஆய்வு செய்தனர். அப்போது ஒரு குறிப்பிட்ட நபர் மோட்டார் சைக்கிளை திருடுவது தெரியவந்தது.இதனை தொடர்ந்து நேற்று தனிப்படை போலீசார் அரசு மருத்துவமனை பகுதியில் மறைந்திருந்து கண்காணித்தனர் அப்போது அந்த குறிப்பிட்ட நபர் மோட்டார் சைக்கிள் திருடிய போது சுற்றி வளைத்து பிடித்தனர். தீவிர விசாரணையில் அந்த நபர் குடியாத்தம் தாடிஆருணாசலம் தெருவை சேர்ந்த பாலச்சந்தர் மகன் தரணி (வயது 33)என்பதும் ஏராளமான மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் திருடிய மோட்டார் சைக்கிள்களை குடியாத்தம் அடுத்த கள்ளூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஞானவேல் (38) என்பவரிடம் கொடுத்து விற்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடிய தரணி மற்றும் திருட்டு மோட்டார் சைக்கிள்கள் வாங்கி விற்று திருட்டுக்கு உடந்தையாக இருந்ததாக ஞானவேல் ஆகியோரை கைது செய்தனர்.மேலும் அவர்கள் அளித்த தகவலின்பேரில் 10 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர். சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.