மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
திமிரி அருகே மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.;
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த நம்பரை கிராமத்தை சேர்ந்தவர் பற்குணன். இவர் நேற்று முன்தினம் வாரச்சந்தையில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றபோது தனது மோட்டார்சைக்கிள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திமிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், பலராமன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டனர்.
பின்னர் நேற்று அதிகாலை காவனூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த திமிரியை அடுத்த ஆனைமல்லூர் கிராமத்தை சேர்ந்த தனசேகர் என்ற சேகர் (வயது 47) என்பவரை சந்தேகத்தின்பேரில் விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
அதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர் ஆற்காடு, வாலாஜா மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 மோட்டார் சைக்கிள்கள் திருடியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 9 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.