லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

மார்த்தாண்டம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-07-16 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.

நண்பர்கள்

குழித்துறை ஹில்வார்டை சேர்ந்தவர் ராஜகுமார். இவருடைய மகன் பிரேம்குமார் (வயது27), தொழிலாளி. திருமணமான இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். இவரும் பாகோடு வட்டவிளை குழவாய்க்கால்விளை வீட்டை சேர்ந்த பென்னட் மகன் அஸ்பின் பெல்லோ (22) என்பவரும் நண்பர்கள்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மார்த்தாண்டத்தில் இருந்து சாமியார்மடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரேம்குமார் ஓட்டி செல்ல அஸ்பின் பெல்லோ பின்னால் அமர்ந்திருந்தார்.

லாரி மீது மோதியது

அவர்கள் மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கை பகுதியில் சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு காரை முந்தி செல்ல முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிள் காரின் பக்கவாட்டில் உரசி நிலை தடுமாறி அதன் முன்பு சென்று கொண்டிருந்த சிமெண்டு லாரியின் டயர் மீது மோதியது.

இதில் நண்பர்கள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அருகில் நின்றவர்கள் இருவரையும் மீட்டு பிரேம்குமாரை குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த அஸ்பின் பெல்லோ மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்