மோட்டார் சைக்கிள், கார் மீது மற்றொரு கார் மோதல்; மூதாட்டி பலி

மோட்டார் சைக்கிள், கார் மீது மற்றொரு கார் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.

Update: 2022-07-06 18:42 GMT

பெரம்பலூர்:

மாப்பிள்ளை பார்ப்பதற்காக...

தஞ்சை சிராஜ்நகரை சேர்ந்தவர் ஜஹாங்கீர். இவரது மனைவி ஜீனத்பேகம்(வயது 55). இவர் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக உறவினரான அதே பகுதியை சேர்ந்த ஜானி பாஷாவின் மனைவி மேரிஜான்(65), ரஹீமின் மனைவி மகபூபி(44) ஆகியோரை அழைத்துக்கொண்டு வாடகை காரில் நேற்று காலை புறப்பட்டார்.

காரை டிரைவர் பட்டுக்கோட்டை பெரிய கடை தெருவை சேர்ந்த தமிழ்வாணனின் மகன் கிருபாகரன்(28) ஓட்டினார். அவர்கள் பெரம்பலூருக்கு வந்து உறவினர்களான வடக்கு மாதவி ரோடு ஆசியா நகரை சேர்ந்த அன்வரின் மனைவி சம்சாத்பேகம்(50), மல்லிகை நகரை சேர்ந்த தவுலத் பாஷாவின் மனைவி சுபேதா பேகம்(40) ஆகியோரை அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சிக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து மதியம் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிள்-கார் மீது மோதல்

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த தண்ணீர்பந்தல் இந்திரா நகர் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா, வடபாதியை சேர்ந்த பெரியசாமி(65) என்பவர், அதே பகுதியை சேர்ந்த நடராஜனின் மனைவி பூபதி(35) என்பவரை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. மேலும் அந்த கார் சாலையின் ஓரத்தில் டயர் பஞ்சராகி நின்ற மற்றொரு காரின் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று மரத்தின் மீது மோதி நின்றது. இதில் பஞ்சரான கார் பள்ளத்தில் இறங்கி நின்றது.

மூதாட்டி சாவு

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மேரி ஜான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த காரில் இருந்தவர்களும், காைர பஞ்சர் பார்த்து கொண்டிருந்த தண்ணீர்பந்தலை சேர்ந்த மெக்கானிக் அருண் (30) என்பவரும், அந்த காரில் வந்த சென்னை அண்ணா நகரை சேர்ந்த முனிசாமி (55), சென்னை கொளத்தூரை சேர்ந்த வெங்கடேசன் (52) ஆகியோரும், மோட்டார் சைக்கிளில் வந்த பெரியசாமி, பூபதி ஆகியோரும் என 10 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மேரிஜானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அருண் என்பவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்