தாய்மார்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்

தாய்மார்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்து பேசினார்.

Update: 2022-12-29 16:11 GMT

தாய்மார்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்து பேசினார்.

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கா்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கினார்.

முன்னதாக அவர் பேசியதாவது:-

தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், பெண்களின் ஆரோக்கியத்திற்காகவும் தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மேலும் அரசின் சார்பில் சமுதாய வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கலாசார நிகழ்ச்சிகளில் வளைகாப்பு என்பது ஒன்றாகும்.

வளைகாப்பு என்பது தாய் வீட்டின் சார்பில் தான் பெண்களுக்கு நடத்தப்படும். தமிழக அரசு தாய் வீடாக கருதி இது போன்ற வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி சீர்வரிசை வழங்கி வருகிறது.

பெண்கள் சரியான பரிசோதனையும், ஆரோக்கியமான உணவையும் எடுத்து கொண்டால் தான் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும்.

தமிழில் பெயர் வைக்க வேண்டும்

தாய்மார்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். பெற்றெடுக்கும் குழந்தைகள் ஆணாகவோ, பெண்ணாகவோ எதுவானாலும் சிறப்பாக வளர்க்க வேண்டும். பெண் குழந்தை பிறந்து விட்டது என்று வருந்த கூடாது. பெண்கள் இந்த நாட்டின் கண்கள். பெண்களின் கையில் தான் வரும் காலம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறுசுவை உணவை பரிமாறினார்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஊராட்சி குழு, நகர மன்ற, ஒன்றியக்குழு தலைவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசையை வழங்கினர். இதில் 550 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட வருவாய் அலுவலர்கள் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப்சிங், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் டாக்டர் கம்பன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகரமன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணிகலைமணி, பரிமளாகலையரசன், தமயந்தி ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட வட்டார திட்ட அலுவலர் சரண்யா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்