குமாரபாளையம்
திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கவுதம். ஐடி ஊழியர் ஆவார். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள தனது உறவினர் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதால் பார்ப்பதற்காக கோவையில் இருந்து தனது மனைவி கிருத்திகா, மற்றும் 3 வயது மகன் பிரவித் ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டு இருந்தார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து 3 பேரும் கீழே விழுந்தனர். அப்போது லாரியின் சக்கரம் கிருத்திகா மற்றும் அவரது மகன் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே தாயும், மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே லேசான காயத்துடன் உயிர் தப்பிய கவுதம் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.