2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

தா.பழூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-19 18:43 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவர் வெளிநாட்டில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த நிலையில் தற்போது கழுவந்தோண்டி கிராமத்தில் இ-சேவை மையம் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அனிதா (வயது 30). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 2 மாதத்தில் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் சமீப காலமாக அனிதாவுக்கு தற்கொலை எண்ணம் வருவதாக கூறி வந்துள்ளார். இதையடுத்து, அனிதாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து தனியார் மருத்துவரிடம் மனநல சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இ-சேவை மையத்திற்கு இளையராஜா செல்லும்போது தனது மகனையும் அழைத்துச் சென்று விட்டார். மீண்டும் மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி பார்த்தும் திறக்காததால் சந்தேகம் அடைந்து ஜன்னலை உடைத்து பார்த்தபோது அவரது மனைவி அனிதா வீட்டிற்குள் தூக்குப்போட்டு தொங்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இளையராஜா அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து அவர்கள் உதவியுடன் பின் பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று தூக்கில் தொங்கிய அனிதாவை மீட்டுள்ளனர். அங்கிருந்து ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அனிதாவின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்