2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
அன்னவாசல் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் கணவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பெண் தற்கொலை
அன்னவாசல் அருகே பரம்பூர் முத்தம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கும் சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி திருவாழ்ந்தூரை சேர்ந்த ராசு மகள் சுதா (வயது 33) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவக்குமார் கோவையில் வேலை பார்த்து வருகிறார். சிவக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டும் வந்துள்ளது.
இதனால் கணவனிடம் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சுதா அடிக்கடி சென்று வருவதும் நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்த சுதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுதாவின் தந்தை ராசுவிற்கு செல்ேபான் மூலம் சிவக்குமார் தகவல் தெரிவித்தார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பரம்பூர் முத்தம்பட்டிக்கு ராசு உள்ளிட்டோர் வந்து பார்த்தபோது சுதாவின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுதாவிற்கு திருமணமாகி 7 ஆண்டுகளே ஆவதால் இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
தர்ணா போராட்டம்
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய சுதாவின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுதாவின் இறப்பிற்கு காரணமான சிவக்குமாரை கைது செய்ய வேண்டும் மற்றும் குடும்பத்தினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து பிரேத பரிசோதனை செய்யும் அறையின் பின் பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் நேற்று மாலை வரை சுதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) பேச்சு வார்த்தை நடத்தி சுதாவின் உடல் பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.